Nature - இயற்கைப் பதிவுகள்

காட்டை பற்றி சிந்தித்தால் நாட்டின் நலன் கூடும்.காடு நம் பழைய வீடு,உயிரினங்களின் வாழ்விடம்.!

Thursday, April 19, 2012

சிறுத்தை என்ன குற்றம் செய்தது?

“கொலை வாளினை எடுடா கொடும் செயல் புரிவோர் அறவே” என்று புரட்சி கவிஞர் பாடினார். படத்தை பாருங்கள் ‘கொடும் செயல் புரிவோர் கொலை வாளினை’ கையில் வைத்திருக்கிறார்களே என்ன செய்வது? இந்த கொலைகாரர்களிடம் சிறு குழந்தையை போல, சிறுத்தை சிக்கியிருக்கிறதே? என்ன குற்றம் செய்தது? ஏன் இந்த கொலை வெறி?

பூனை குடும்பத்தில் புலியை விட சிறுத்தை வலிமை குறைந்தது என்றாலும் தன் இரையை வேட்டையாடும் போது நெடும் பாய்ச்சல் பாயும் ஆற்றல் பெற்றது. சிறுத்தை எளிதில் மரம் ஏறக்கூடியது. அழகிய செம்பழுப்பு மஞ்சள் உடலில் கருப்பு புள்ளிகளுடன் கலந்து கவர்ச்சியுடன் காணப்படும் சிறுத்தை, மனிதர்களுடான மோதலில் சிக்கி இன்றைக்கு பல இடங்களில் கூண்டு வைத்து பிடிக்கப்படும் விலங்குகளில் சிறுத்தை முதலிடம் வைக்கிறது .சிறுத்தைகள் வாழும் இடங்களில் மனிதர்கள் ஆக்ரமிப்பு செய்ததும்,காடுகளை அழித்து தோட்டங்களை உருவாக்கியதும்,அங்கு கால்நடைகளை வளர்ப்பதும் தான்,மனிதர்களுக்கும்,சிறுத்தைகளுக்கும் மோதல் ஏற்பட மூல காரணம். மனிதர்களுடன் மோதிய உயிரினங்கள் வெற்றி அடைந்ததாக வரலாறு இல்லை.இனி எதிர்காலத்தில்(விரைவில்)சிறுத்தைகள் அழிந்து வரும் பட்டியலில் விரைந்து இடம் பிடிக்கும் என நம்பபடுகிறது.

காட்டுத்தீ


நம் மக்களில் பெரும்பாலானோர் காட்டுத்தீ என்றவுடனே அது காட்டுக்குள் மூங்கிலோடு மூங்கில் உரசி தீப்பிடிப்பதாக நம்புகின்றனர். நம் நாட்டு காட்டுத்தீ அனைத்தும் மனிதர்களால் வைக்கப்படும் தீ. பழி வாங்க துடிக்கும் குணமுள்ள மனிதர்களின் கொடூர செயல். காட்டுத்தீயினால் ஏற்படும் சேதங்களும், இழப்புகளும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். நம் தலையை நாமே கொள்ளி வைப்பதற்கு சமம். மடி அறுத்த பிறகு பால் கறக்க முடியுமா?
காட்டில் தீ வைப்பதற்கான காரணங்கள்:
1.  காட்டுக்குள் ஆடு,மாடுகள் மேய்ப்பதர்க்கும், விறகு எடுப்பதற்கும் வன துறையும், அரசும் அனுமதி மறுப்பதால், வனத் துறைக்கும், அரசுக்கும் எதிராக பழி வாங்குவதற்காக வைக்கப்படும் தீ (எங்களுக்கு பயன்படாதது, யாருக்கும் பயன்படகூடாது)
2.  காட்டுக்குள் தீ வைத்தால், தீயினால் ஏற்படும் புகை, மேலே சென்று- மேகங்களில் கலந்து மழையாக பொழியும் என்ற தவறான நம்பிக்கை. (இது புகழ் பெற்ற மூடநம்பிக்கை)  
3.  காட்டு ஓரங்களில் பீடி, சிகரெட் புகைபவர்கள் அணைக்காமல் விட்டெரிவது.
இலட்சக்கணக்கான ஆண்டுகளாக பல்லுயிர் துடிப்புடன் உருவாகிய காடுகளை, அது சார்ந்து இருக்கும் உயிரினங்களை, சில மணி நேரங்களில், தீயினால் அழிப்பது, மனிதர்களால் மீட்டு எடுக்க முடியாத பேரிழப்பாகும். மனிதர்களின் பழிவாங்கும் கொடூர செயலையும், அறியாமையும் எப்படி மாற்ற போகிறோம்?  

Sunday, March 25, 2012

நம் நாட்டில் பஞ்சம் இல்லை ஆனால் பட்டினி இருக்கிறதே!!!!

சில தினங்களுக்கு முன் இரவு சுமார் 9 மணி அளவில் வீட்டிற்கு புறப்பட்டு சென்று கொண்டு இருந்தேன். வழக்கமாக பத்து மணிக்கு புறப்படும் நான்,சற்று முன்பாக புறப்பட்டதிற்கு காரணம் வேலை குறைவாக இருந்தது தான், புஷ்பா தியேட்டர் அருகே கீதா மெடிக்கல் வந்த பொழுது வாழை பழம் வாங்க முடிவெடுத்து வண்டியை பஸ் நிறுத்தத்திற்கு அருகில் நிறுத்தி விட்டு வழக்கமாக சில நேரங்களில் நான் வாங்கும் பழ வண்டிகாரரிடம் சென்றேன்.
         பழத்தை வாங்கி கொண்டு இருக்கும் பொழுது, சற்றும் எதிர்பாராத குரல் ஒன்று என்னை திரும்பி பார்க்க வைத்தது. ”சார் பசிக்குது ஏதாவது வாங்கி கொடுங்க சார்” முடி கலைந்த, முகம் சோர்ந்த, மெலிந்த, சுமார் இருபது வயதுடைய வாலிபன் என் முன் நின்று கொண்டிருந்தான். நான் அவனை பார்த்தபொழுது பேசாமல் அமைதியாக நின்றுகொண்டிருந்தான்.நான் மேலும்,கீழும் உற்று நோக்கினேன் கருத்த உடல்,உணவின்றி,உருக்குலைந்து இருந்தது. அவன் மீண்டும் “சார் பசிக்குது, காலையில் இருந்து சாப்பிடலை ஏதாவது வாங்கி கொடுங்க சார், ‘ஏன்பா ஏதாவது பனியன் கம்பனியில் வேலை செய்ய வேண்டியது தானே?’ என்று வழக்கமாக பிச்சை எடுப்பவர்களை பார்த்து கேட்கின்ற கேள்வியை கேட்டேன்.
           “சார் யாருமே வேலை இல்லைன்னு சொல்றாங்க, நான் திருப்பூர் வந்து மூணு நாளு ஆச்சு, இருந்த பணம் எல்லாம் செலவாச்சு, வேலை இருந்தா குடுங்க சார், எந்த வேலையா இருந்தாலும் செய்யறேன், நம்பிக்கையாக இருப்பேன், இப்போ பசிக்குது சார், ஏதாவது வாங்கி குடுங்க சார்” அவன் சொல்லும் பொழுது என் மனம் கசிந்தது, கண்களில் நீர் கோர்த்தது, உடனே பழ கடைக்காரன் “இந்த மாதிரி பசங்க எல்லாம் பிச்சை எடுக்கிற, புது டெக்னிக் அதை எல்லாம் கண்டுகாதிங்க சார்” என்று என்னிடம் கூறி விட்டு- “டேய் இங்கிருந்து கிளம்பு” என அந்த வாலிபனை விரட்டினார். நான் குறுக்கிட்டு தம்பி என் கூட வா என அழைத்து கொண்டு நேர் எதிராக இருந்த  ஹோட்டலுக்கு அழைத்து சென்றேன். 
           ஹோட்டல் வாசல் நுழையும் முன் இருந்த கேசியரிடம் இந்த பையனுக்கு சாப்பிட எது வேண்டுமானாலும் குடுங்க பில் நான் தருகிறேன் என கூறிவிட்டு, தம்பி போய் திருப்தியா சாப்பிடு என்றவுடன், அந்த பையனை பார்த்தவுடன், கல்லாவில் உட்கார்ந்து இருப்பவர் “சார், பார்த்து, இந்த மாதிரி பசங்கள நம்பாதீங்க” என்றார். நான் கண்டு கொள்ளவில்லை, இதை எல்லாம் சற்று தள்ளி கவனித்து கொண்டிருந்த, பெங்களூர் ஆம்னி பஸ்சுக்காக காத்து கொண்டிருந்த பயணி ஒருவர் ஹோட்டல் முன்பு நின்று கொண்டிருந்த என்னிடம் வந்து “ஹலோ சார் ஒரு நிமிடம், என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தேன்.பருத்த உடல்,வாயில் கிங்ஸ் சைஸ் சிகரெட் புகைந்து கொண்டு இருந்தது. “அந்த பையனை பார்த்தா பிச்சைக்காரனா தெரியவில்லை,நீங்க அந்த பையனிடம் பேசியதை கேட்டு கொண்டு இருந்தேன், நீங்க அந்த பையனுக்கு உணவு வாங்கி கொடுப்பது சரி தான், தப்பாக நினைக்காதீங்க, எனக்கு பெங்களூர் பஸ் புறப்பட தயாராகிவிட்டது, இந்த பணத்தை வைத்து கொள்ளுங்கள் அவன் சாப்பிட்டு முடிந்தவுடன் இதை கொடுத்து விடுங்கள்” என 100 ரூபாய் தாளை என்னிடம் நீட்டினார்.
     நான் மறுத்து விட்டு, “சாரி சார், நான் கொடுத்துவிடுகிறேன், நன்றி நான் பார்த்து கொள்கிறேன்” உடனே அவர் ஹோட்டல் உள்ளே சென்று காசாளரிடம் அந்த பையனை கை காட்டி அவன் சாப்பிட எது வேண்டுமே கொடுங்கள் மீதி பணத்தை அவனிடம் கொடுத்து விடுங்கள் என 100 ரூபாயை  நீட்டினார் அங்கேயும் நான் தடுக்கவே, பையனிடம் சென்று இதை செலவுக்கு வைத்து கொள் என கட்டாயபடுத்தி கையில் திணித்து விட்டு,வேகமாக கை காட்டி விட்டு எங்கள் கண்களில் இருந்து மறைந்தார். பையன் சாப்பிட்டு விட்டு கையை அலம்பி விட்டு வந்தான், தன்னிடம் இருக்கும் 100 ரூபாய் நோட்டை கடைக்காரனிடம் நீட்டினான், நான் குறுக்கிட்டு அதை நீயே வைத்துகொள், கடைக்காரனிடம் எவ்வளவு என்ற பொழுது “25 ரூபாய் சார்” என்றவுடன், 25 ரூபாயை கொடுத்து விட்டு, தம்பி இங்கே வா இப்போ பசி தீர்ந்ததா? இனி என்ன செய்ய போகிறாய்? ஊருக்கா? வேலைக்கா?
          “சார் ரொம்ப நன்றிங்க, நான் ஊருக்கு போயிறேன் சார், பஸ் ஸ்டாண்டு பக்கம் போய் இரவு பஸ் பிடித்து போய் விடுகிறேன்” என்றான். எந்த ஊர் என்றேன், மாயவரம் என்றவுடன் பணம் பத்தாது என்று மீண்டும் நான் 50 ரூபாய் கொடுத்தேன் வாங்க மறுத்தான். பணம் போதவில்லை என்றால் நீ ஊர் போய் சேர முடியாது, என கைகளில் பணத்தை திணித்தேன்.”பத்திரமாக ஊர் போய் சேர வேண்டும் நாளைக்கு இந்த பக்கம் உன்னை நான் பார்க்க கூடாது, ஊருக்கு சென்றவுடன் என்னை தொடர்பு கொள்” என கண்டிப்புடன் கூறி விட்டு,எனது செல்போன் நம்பரை கொடுத்து விட்டு, நான் வீட்டிற்கு கிளம்பினேன். அந்த பையன் பெயர்,விலாசம் கூட கேட்க மனமில்லை. எதற்காக கேட்க வேண்டும்? இது போன்ற நாதி அற்றவர்கள்,இலட்சகணக்கில் தினமும் வெவ்வேறு இடங்களில், திசை மாறி பணம் இல்லாமல்,பசியோடு தவிக்கிறார்கள். இவர்களை கெட்டவர்கள் என எடை போடும் மனித சமூகம், இவர்களை புறக்கணிப்பதால்,பாதிக்கபடுவதால் கெட்டவர்களாக மாற வாய்ப்பு ஏற்படுகிறது. மனிதர்களின் வாழ்க்கை என்ற நிகழ்வோடு, வாழ்வியல் இருத்தலுக்கான போராட்டம் என்ன உறவு கொண்டுள்ளது? ஒரு புறம் உணவு விரயம் மறு புறம் உணவுக்காக திண்டாட்டம், நம் நாட்டில் பஞ்சம் இல்லை ஆனால் பட்டினி இருக்கிறதே,அதே போல் ‘தனி மனிதருக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்ற பாரதியார் பாடலும்  இருக்கிறது,இருந்தும் தனி மனிதர்களின் பட்டினி தொடர்கிறதே?
    இந்நிலை மற்ற உயிரினங்களுக்கு உண்டா? ‘காக்கை கரைவா கரைந்துண்ணும்’- ‘தான் பசித்திருக்க தன் இணைக்கு நீர் தந்த மான்’ என்பதெல்லாம் இயற்கை அல்ல அறிவியலும் அல்ல, உணவு போட்டியில் உயிர் இழக்கும் அல்லது உணவை தேடி ஓடும். 
   “தகுதி உள்ளவை, தக்கவை, உயிர் வாழும்” எனும் சார்லஸ் டார்வின் கோட்பாடு நினைவுக்கு வந்தது. இந்த பையன் போன்ற மனிதர்கள் தகுதி அற்றவர்களா? தாகாதவர்களா? நாம் ஏன் உதவி செய்ய வேண்டும்? இவர்கள் ஏன் உயிர் வாழ வேண்டும்? எப்படி உயிர் வாழ்கிறார்கள்? டார்வினின் கோட்பாடு மனிதர்களுக்கு பொருந்துமா? நான் வீட்டிற்குள் நுழையும் போது முடிவிற்கு வந்தேன், மனிதர்களை தவிர, மற்ற எல்லா உயிரினங்களுக்கும் இந்நிலை பொருந்தாது என கருதுகிறேன்.
மனிதன் அறவியலாலும்,அறிவியலாலும் காக்கபடுகிறான். மனிதர்களை காப்பாற்ற தத்துவகளும்,கோட்பாடுகளும் இருக்கின்றன.உலகத்தில் எந்தவொரு தனி மனிதனுக்கும் உணவில்லை எனில் ஜகத்தை போர்களமாக்கி போர்க்குரல் எழுப்பிய காரல் மார்க்ஸ் தத்துவமும், சாதி, மத பேதங்கள் மூலம் மோதல்களுக்கு எதிராக மனித சமூகத்தை காப்பாற்றும் பெரியாரின் சம தர்ம சமுதாய தத்துவமும் இருக்கும் மட்டும், ‘தக்கவை உயிர் வாழும் கோட்பாடு’ மனிதர்களுக்கு பொருந்தாது என்றே நினைக்கின்றேன். எனக்கும் அந்த பெங்களூர் பயணிக்கும், பசியால் துடிக்கும் சக மனிதனுக்கு உணவு வாங்கி கொடுக்கும் உந்துதல் ஏற்பட்டதிற்கு மனித நேயமும்,மேலே குறிப்பிட்ட தத்துவங்களும் தான் காரணம் என கருதுகிறேன்.
             அடுத்த நாள் காலை என் செல்பேசி புதிய நம்பருடன் ஒலித்தது, “சார், நான் ஊர் வந்து சேர்ந்து விட்டேன், இனி இங்கேயே வேலை பார்த்துக்கிறேன், சார், கண்டிப்பாக ஒரு நாளைக்கு எங்க ஊருக்கு வாங்க”- ‘சரி தம்பி, மேலும் படிக்க முயற்சி செய்’ என கூறி தொடர்பை துண்டித்தேன், மனதிற்கு நிம்மதியாக இருந்தது, அன்றைய தினம் முழுவதும் மனம் மகிழ்ச்சியாக இருந்தது.  

நான் சந்தித்த உண்மை சம்பவம், சிந்தனையின் வடிவத்தில் சமர்பிக்கின்றேன்.


அ.மு.அம்சா,
திருப்பூர்.        

Thursday, March 22, 2012

இன்று உலக வன(கானக) நாள் (21-03-2012), காடுகள் பற்றிய அக்கறையும், விழிப்புணர்வும் ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட நாள்.காட்டை பற்றி சிந்தித்தால் நாட்டின் நலன் கூடும்.
காடு நம் பழைய வீடு,உயிரினங்களின் வாழ்விடம்.

காடு உயர நாடு உயரும்,
நாடு உயர மக்கள் வாழ்வு உயரும்,
மக்கள் வாழ்வு உயர மகிழ்ச்சி உயரும்,
மகிழ்ச்சி உயர ஒற்றுமை உயரும்,
ஒற்றுமை உயர்ந்தால் உலகம் உயரும்.

Sunday, November 13, 2011

தெங்குமராடா- கோடநாடு மலை உச்சியில் இருந்து நடை பயணம்

இயற்கையை நேசிப்பவர்கள் எல்லாம்,

இயற்கையை ஆழமாக புரிந்தவர்கள் அல்ல.....இயற்கைவாதி.  

அதிகாலை 5 மணிக்கு எழுந்து கோடநாடு மலை உச்சியில் இருந்து காட்டு வழியாக தெங்குமராடா செல்லும் நடை பயணத்தின் மகிழ்ச்சியில் அனைவரும் உற்சாகத்தோடு புறப்பட்டோம்.நீலகிரி மலை அடிவாரம் வந்தபோது உற்சாகம் அதிகமானது. நடை பயணத்திற்கான தேவையான பொருள்கள் மற்றும் மதிய உணவுக்கான தாயரிப்போடு தயாராக இருந்தோம்.
      நாங்கள் காட்டுக்குள் செல்லும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்.யானை அல்லது விலங்குகளின் இருப்பிடத்தில் நாங்கள் நடந்து செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறை ஆலோசனைகளை காட்டுயிர் ஆசிரியர் விளக்கி கூறினார்.
      நாங்கள் செல்லும் காட்டுவழி நடை பயணத்தில் எந்த விலங்கை சந்திக்க போகிறோம் என்று மனதில் கற்பனையோடும்,ஆவலோடும் காட்டுயிர் ஆசிரியர் உடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது. அரவேணு வந்தவுடன், நாங்கள் செல்லும் பயணத்திற்கான அனுமதி கடிதத்துடன் நண்பர் பூபதி காத்திருந்தார். காலை 8.30 மணிக்கு கர்சன் எஸ்டேட் தாண்டி அய்யன் எஸ்டேட் பாதையின் தொடக்கத்தில் வண்டியை நிறுத்தி அனைவரும் இறங்கினோம். காட்டுயிர் ஆசிரியர் அனைவருக்கும் வாழ்த்து கூறி சில ஆலோசனைகளை வழங்கி, நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.காட்டுயிர் ஆசிரியரிடம் விடைப்பெற்று எங்கள் வழிகாட்டியை அழைத்து கொண்டு நடை பயணத்தை தொடங்கினோம்.

 
          சுமார் 3 அல்லது 4 கிலோமீட்டர் நடந்து மலைகளை கடந்து காட்டுக்குள் சென்று அய்யன் எஸ்டேட் முடிவில் ஒரு காட்டு மரத்தின் அடியில் அமர்ந்து சிறிது நேரம் இளைப்பாறினோம். சுமார் 6000 அடி உயரத்தில் சரிவை நோக்கி எங்கள் நடைபயணம் தொடர்ந்தது. திடீரென்று எங்களது வழிகாட்டி “எல்லோரும் நில்லுங்கள்,யாரும் பேசாதீர்கள்”-என சைகையால் எச்சரித்தார்.அப்பொழுது காட்டு யானையின் சப்தம் நாங்கள் நடந்து செல்லும் பாதையின் வலது புறம் இருந்து கேட்டது. ஒரு நிமிடம் அமைதியாக நின்றோம். யானை கிளைகளை உடைக்கும் சப்தம் கேட்டது.
10 அடி உயரத்திற்கு மரம்,செடி,புதர்களால் இரு புறமும் சூழப்பட்ட ஒற்றையடி பாதையில் எல்லோரும் அமைதியாக,வரிசையாக,ஒன்றன்பின் ஒன்றாக நகர்ந்தோம்.முன்னே செல்லும் வழிகாட்டி ஒரு திருப்பத்தில் திரும்பும் போது, சற்று நின்று,எதோ சொல்லி சப்தம் போட்டார். அவரது சொல் ஊர்ப்புறத்தில் நாயை விரட்டுவது போல் இருந்தது, கையில் வைத்திருக்கும் தடியை தரையில் ஓங்கி அடித்தவாறு வித விதமாக சப்தம் போட்டார். நண்பர்கள் அனைவரும் அமைதி, அனைவரின் முகத்திலும் அச்சம் கலந்த பதட்டத்துடன் மெல்ல வழிக்காட்டியின் பின் நடந்து சென்றனர். ஒரு வேளை நாங்கள் நடந்து செல்லும் ஒற்றையடி பாதையின் குறுக்கே யானை வந்து விட்டால்,மேல் நோக்கி ஓடுவதை தவிர வேறு வழியில்லை என்ற எண்ணம் எல்லாருடைய மனதிலும் தோன்றி அச்சத்தை உண்டாகியது. யாரும் ஒருவருக்கொருவர் இடைவெளி விடாமல் நடந்து செல்லுங்கள் என்றபடி நானும் அவர்களுடன் பின்தொடர்ந்து, வழிகாட்டியின் அருகில் சென்று “சப்தம் போட வேண்டாம், விரைவாக இந்த இடத்தை கடந்து விடலாம்” என கூறி நடையை விரைவுபடுதினோம். அந்த பதட்டம் சுமார் 30 நிமிடம் நீடித்தது.
     ஒரு வழியாக குறுகிய,அடர்ந்த காட்டை கடந்து ஒரு திருப்பத்தில் மலை முகட்டில் திரும்பி, அல்லிமாயாறு பள்ளத்தாக்கு காட்சி முனை பகுதிக்கு வந்தோம்.மறுபக்கத்தில் பக்கவாட்டில் உயரமான மலை, அதன் நடுவில் பெரும் பிளவு, நாங்கள் பக்கவாட்டு மலையின் சரிவில் ஒற்றையடி பாதையில் நின்றவாறு, பிளவை பார்த்து வியந்து,ரசித்தபடி சிறிது நேரம் ஆசுவாசப்படுத்தி ஒய்வெடுத்தோம்.

    கடந்து வந்த பாதையை பற்றியும் யானையை பற்றியும் பேச்சு எழுந்தது நண்பர் அபிசேக் யானையின் சத்தத்தை அருகில் கேட்டதாக கூறினார். பள்ளத்தாக்கின் ஒரு புறத்தில் இருந்து இதமாக காற்று வீசியது உடலுக்கு உற்சாகமாக இருந்தது.

   மலை சரிவில் நடை பயணம் தொடர்ந்தது. சுமார் ஒரு மணி நேரம் நடைப்பயணத்திற்கு பிறகு இன்னொரு மலையின் பள்ளத்தாக்கில் இறங்கினோம். அங்கே ஒரு சிற்றோடையில் அமர்ந்து சிறிது நேரம் இளைப்பாறி பயணத்தை தொடர்ந்தவுடன், திடீரென்று எங்கள் முன்னால் இருந்த மலை சரிவின் பாதை துண்டிக்கப்பட்டு இருந்தது. வழிகாட்டி அங்கும் இங்கும் சுற்றிப்பார்த்தார். எந்த பக்கம் பார்த்தாலும் பெரிய பாறாங்கல் தான் தென்பட்டது.அதில் எட்டிப்பார்த்தால் பெரிய சரிவு தான் கண்களுக்கு தெரிந்தது. ஒருவழியாக ஒரு பாறையின் சரிவில் கைகளால் தவழ்ந்து,சறுக்கி கொண்டு அடுத்த பாறைக்கு சென்று விடலாம் எனக்கூறி அவர் முன்னே சறுக்கி செல்ல, யாருமே சறுக்கி செல்ல முடியாமல் தடுமாறினோம்.
   வேறுவழியில்லாமல் வழிகாட்டி பாறையின் நடுவில் நின்று கொண்டு தன் தோல்துண்டை எடுத்து விரித்து, கயிறு போல் திரித்து அதை மேல் புறம் வீசி அதை பிடித்து கொண்டு ஒவ்வொருவராக பாறையின் கீழ் சறுக்கி கீழே இறங்கினோம்.எல்லோரும் கீழே இறங்குவதற்கு சுமார் ஒரு மணி நேரம் ஆயிற்று.வழிகாட்டியின் பக்கம் நகர்ந்து சென்று கீழ்நோக்கி பார்த்தால் சுமார் 1000 அடியில் பள்ளத்தாக்கு, தவறி விழுந்தால் அதோகதி தான் – அந்த இடத்தில் நண்பர்கள் கால்கள் நடுங்கியது. மனம் தளர்ந்து போனார்கள். ஒரு வழியாக அனைவரும் பாறையை கடந்து மறுபுறம் சென்றதும் சோதனை தொடர்ந்தது. கீழே இறங்கிய சரிவில் பாதை இல்லை, அனைவரும் தவழ்ந்து, தவழ்ந்து அந்த மலையை விட்டு இறங்கினோம். சரியான பாதைக்கு வந்த பின்னர் எல்லோரும் உற்சாகம் அடைந்தார்கள். கீழே இருந்து அந்த மலையை பார்த்தோம் பிரமிப்பாக இருந்தது.கடந்த முறை நீலகிரியில் பெய்த கன மழையால் நிலசரிவு ஏற்பட்டு இருக்கிறது என பிறகு அறிந்து கொண்டோம். ஒரு வழியாக துண்டிக்கப்பட்ட பாதையின் மறுமுனையை அடைய சுமார் இரண்டு மணி நேரம் ஆனது.
  மீண்டும் மலை சரிவில் எங்கள் காட்டுவழி பயணம் தொடர்ந்தது. நண்பர் ஒருவருக்கு கால்வலி ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதிப்பட்டார், பிறகு அவருக்காக அனைவரும் மெல்ல நடக்க துவங்கினோம். 

  அல்லிமாயாறு பள்ளத்தாக்கின் அடிவாரம் அடைவதற்கு சற்று மேலே ஒரு நீரோடையில் மதிய உணவை, மாலை நேரத்தில் சாப்பிட்டோம். நீரோடையில் அனைவரும் களைப்பு தீர குளித்து, உடலை உற்சாகப்படுத்தி கொண்டு, வெளிச்சம் மறைவதற்குள் அல்லிமாயாறு செல்ல வேண்டும்,என அனைவரும் அவசரமாக கிளம்பினோம்.நீரோடையை தாண்டி சிறிது தூரத்தில் வழி எங்கும் சில இடங்களில் சிறுத்தையின் எச்சங்களை பார்த்தோம். மாலை 6 மணிக்கு அல்லிமாயாறு வந்தடைதோம்.அனைவரும் சோர்வாக இருந்தனர்.

  வழிகாட்டியை அழைத்து ஏதாவது வண்டி கிடைக்குமா? என விசாரிக்க சொன்னோம். ஊருக்குள் சுற்றி யாரிடமோ பேசி பால்வண்டி ‘வேனை’ கூட்டி வந்தார் வழிகாட்டி, களைப்பாக இருந்த நண்பர்கள் வேனுக்குள் வேகமாக ஏறினார்கள், அரை மணி நேரத்தில் தெங்குமராட தங்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தது வேன். எங்கள் நடை பயணம் முடிந்தது. ஓய்வெடுக்கும் விடுதியின் முன் அமர்ந்து நாங்கள் வந்த சுமார் 6000 அடி உயரமுள்ள மலையை நோக்கினோம். மலைப்பாகவும்,மகிழ்ச்சியாகவும் இருந்தது. 6000 அடி உயரத்தில் இருந்து இறங்கி வந்தது, மனதிற்கு மகிழ்ச்சியையும், புது நம்பிக்கையும்,எங்களுக்குள் ஏற்பட்டது. அதே சமயம் எந்த வன விலங்கும் எங்கள் கண்ணில் படாதது வருத்தத்தையும், வன விலங்குகள் அழிந்து வரும் ஆபத்தையும் எங்களுக்கு உணர்த்தியது.
   புலி வாழும் காடு என்று புகழப்பட்ட,கூறப்பட்ட,இந்த காட்டினுள் புலி வாழ்வதற்கான எந்த தடயத்தையும்,அடையாளத்தையும் காண முடியவில்லை.மலை உச்சியில் தேயிலை தோட்டங்களால் சூழப் பட்டிருக்கிறது.மலை அடிவாரத்தில் அல்லிமாயாறு என்ற கிராமத்தால் விவசாய நிலங்களாக சூழப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து வரும் இரண்டு, மூன்று ஊராக, விவசாயத்தாலும்,மனிதர்களாலும் சுற்றி வளைக்கப் பட்டிருக்கிறது. வன விலங்குகள் வாழிடம் மக்கள் வாழிடமாக மாறி, மக்கள் பெருக்கமும், வாகனங்களின் எண்ணிக்கையும் காட்டுக்குள் அதிகமாகி இருக்கும் ஆபத்தையும் அறிந்து கொள்ள முடிந்தது.
   மேலேயும், கீழேயும் மனிதர்கள் ஆக்கரமிப்பு செய்து, காட்டை கழுத்தை நெறிப்பது போல் நெறித்தால் வன செல்வங்களை எப்படி காக்க முடியும்? என்ற கேள்வி நியாயமானதாக இருந்தாலும், எதிர் கேள்விகளால் சிக்கல்கள் அதிகமாகி கொண்டே இருப்பதை நினைத்தால் வருத்தம் அதிகரிக்கின்றது.
    இந்த நாடும், இந்த நாட்டு மக்களும்,இந்த காடும், இந்த காட்டு உயிரினங்களும் நன்றாய் வாழ முடியுமா? இயற்கையை ஆழமாக புரிந்தவர்கள் மட்டும் தான் காட்டையையும், இந்த நாட்டையையும் காப்பாற்ற முடியும். நம் சமூகத்தை நினைத்தோம், கனத்த இதயத்தோடு படுக்கைக்கு சென்றோம்