Nature - இயற்கைப் பதிவுகள்

காட்டை பற்றி சிந்தித்தால் நாட்டின் நலன் கூடும்.காடு நம் பழைய வீடு,உயிரினங்களின் வாழ்விடம்.!

Sunday, March 25, 2012

நம் நாட்டில் பஞ்சம் இல்லை ஆனால் பட்டினி இருக்கிறதே!!!!

சில தினங்களுக்கு முன் இரவு சுமார் 9 மணி அளவில் வீட்டிற்கு புறப்பட்டு சென்று கொண்டு இருந்தேன். வழக்கமாக பத்து மணிக்கு புறப்படும் நான்,சற்று முன்பாக புறப்பட்டதிற்கு காரணம் வேலை குறைவாக இருந்தது தான், புஷ்பா தியேட்டர் அருகே கீதா மெடிக்கல் வந்த பொழுது வாழை பழம் வாங்க முடிவெடுத்து வண்டியை பஸ் நிறுத்தத்திற்கு அருகில் நிறுத்தி விட்டு வழக்கமாக சில நேரங்களில் நான் வாங்கும் பழ வண்டிகாரரிடம் சென்றேன்.
         பழத்தை வாங்கி கொண்டு இருக்கும் பொழுது, சற்றும் எதிர்பாராத குரல் ஒன்று என்னை திரும்பி பார்க்க வைத்தது. சார் பசிக்குது ஏதாவது வாங்கி கொடுங்க சார்முடி கலைந்த, முகம் சோர்ந்த, மெலிந்த, சுமார் இருபது வயதுடைய வாலிபன் என் முன் நின்று கொண்டிருந்தான். நான் அவனை பார்த்தபொழுது பேசாமல் அமைதியாக நின்றுகொண்டிருந்தான்.நான் மேலும்,கீழும் உற்று நோக்கினேன் கருத்த உடல்,உணவின்றி,உருக்குலைந்து இருந்தது. அவன் மீண்டும் “சார் பசிக்குது, காலையில் இருந்து சாப்பிடலை ஏதாவது வாங்கி கொடுங்க சார், ‘ஏன்பா ஏதாவது பனியன் கம்பனியில் வேலை செய்ய வேண்டியது தானே? என்று வழக்கமாக பிச்சை எடுப்பவர்களை பார்த்து கேட்கின்ற கேள்வியை கேட்டேன்.
           “சார் யாருமே வேலை இல்லைன்னு சொல்றாங்க, நான் திருப்பூர் வந்து மூணு நாளு ஆச்சு, இருந்த பணம் எல்லாம் செலவாச்சு, வேலை இருந்தா குடுங்க சார், எந்த வேலையா இருந்தாலும் செய்யறேன், நம்பிக்கையாக இருப்பேன், இப்போ பசிக்குது சார், ஏதாவது வாங்கி குடுங்க சார் அவன் சொல்லும் பொழுது என் மனம் கசிந்தது, கண்களில் நீர் கோர்த்தது, உடனே பழ கடைக்காரன் “இந்த மாதிரி பசங்க எல்லாம் பிச்சை எடுக்கிற, புது டெக்னிக் அதை எல்லாம் கண்டுகாதிங்க சார்என்று என்னிடம் கூறி விட்டு- “டேய் இங்கிருந்து கிளம்பு என அந்த வாலிபனை விரட்டினார். நான் குறுக்கிட்டு தம்பி என் கூட வா என அழைத்து கொண்டு நேர் எதிராக இருந்த  ஹோட்டலுக்கு அழைத்து சென்றேன். 
           ஹோட்டல் வாசல் நுழையும் முன் இருந்த கேசியரிடம் இந்த பையனுக்கு சாப்பிட எது வேண்டுமானாலும் குடுங்க பில் நான் தருகிறேன் என கூறிவிட்டு, தம்பி போய் திருப்தியா சாப்பிடு என்றவுடன், அந்த பையனை பார்த்தவுடன், கல்லாவில் உட்கார்ந்து இருப்பவர் “சார், பார்த்து, இந்த மாதிரி பசங்கள நம்பாதீங்க என்றார். நான் கண்டு கொள்ளவில்லை, இதை எல்லாம் சற்று தள்ளி கவனித்து கொண்டிருந்த, பெங்களூர் ஆம்னி பஸ்சுக்காக காத்து கொண்டிருந்த பயணி ஒருவர் ஹோட்டல் முன்பு நின்று கொண்டிருந்த என்னிடம் வந்து “ஹலோ சார் ஒரு நிமிடம், என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தேன்.பருத்த உடல்,வாயில் கிங்ஸ் சைஸ் சிகரெட் புகைந்து கொண்டு இருந்தது. “அந்த பையனை பார்த்தா பிச்சைக்காரனா தெரியவில்லை,நீங்க அந்த பையனிடம் பேசியதை கேட்டு கொண்டு இருந்தேன், நீங்க அந்த பையனுக்கு உணவு வாங்கி கொடுப்பது சரி தான், தப்பாக நினைக்காதீங்க, எனக்கு பெங்களூர் பஸ் புறப்பட தயாராகிவிட்டது, இந்த பணத்தை வைத்து கொள்ளுங்கள் அவன் சாப்பிட்டு முடிந்தவுடன் இதை கொடுத்து விடுங்கள் என 100 ரூபாய் தாளை என்னிடம் நீட்டினார்.
     நான் மறுத்து விட்டு, “சாரி சார், நான் கொடுத்துவிடுகிறேன், நன்றி நான் பார்த்து கொள்கிறேன் உடனே அவர் ஹோட்டல் உள்ளே சென்று காசாளரிடம் அந்த பையனை கை காட்டி அவன் சாப்பிட எது வேண்டுமே கொடுங்கள் மீதி பணத்தை அவனிடம் கொடுத்து விடுங்கள் என 100 ரூபாயை  நீட்டினார் அங்கேயும் நான் தடுக்கவே, பையனிடம் சென்று இதை செலவுக்கு வைத்து கொள் என கட்டாயபடுத்தி கையில் திணித்து விட்டு,வேகமாக கை காட்டி விட்டு எங்கள் கண்களில் இருந்து மறைந்தார். பையன் சாப்பிட்டு விட்டு கையை அலம்பி விட்டு வந்தான், தன்னிடம் இருக்கும் 100 ரூபாய் நோட்டை கடைக்காரனிடம் நீட்டினான், நான் குறுக்கிட்டு அதை நீயே வைத்துகொள், கடைக்காரனிடம் எவ்வளவு என்ற பொழுது “25 ரூபாய் சார்என்றவுடன், 25 ரூபாயை கொடுத்து விட்டு, தம்பி இங்கே வா இப்போ பசி தீர்ந்ததா? இனி என்ன செய்ய போகிறாய்? ஊருக்கா? வேலைக்கா?
          “சார் ரொம்ப நன்றிங்க, நான் ஊருக்கு போயிறேன் சார், பஸ் ஸ்டாண்டு பக்கம் போய் இரவு பஸ் பிடித்து போய் விடுகிறேன் என்றான். எந்த ஊர் என்றேன், மாயவரம் என்றவுடன் பணம் பத்தாது என்று மீண்டும் நான் 50 ரூபாய் கொடுத்தேன் வாங்க மறுத்தான். பணம் போதவில்லை என்றால் நீ ஊர் போய் சேர முடியாது, என கைகளில் பணத்தை திணித்தேன்.பத்திரமாக ஊர் போய் சேர வேண்டும் நாளைக்கு இந்த பக்கம் உன்னை நான் பார்க்க கூடாது, ஊருக்கு சென்றவுடன் என்னை தொடர்பு கொள் என கண்டிப்புடன் கூறி விட்டு,எனது செல்போன் நம்பரை கொடுத்து விட்டு, நான் வீட்டிற்கு கிளம்பினேன். அந்த பையன் பெயர்,விலாசம் கூட கேட்க மனமில்லை. எதற்காக கேட்க வேண்டும்? இது போன்ற நாதி அற்றவர்கள்,இலட்சகணக்கில் தினமும் வெவ்வேறு இடங்களில், திசை மாறி பணம் இல்லாமல்,பசியோடு தவிக்கிறார்கள். இவர்களை கெட்டவர்கள் என எடை போடும் மனித சமூகம், இவர்களை புறக்கணிப்பதால்,பாதிக்கபடுவதால் கெட்டவர்களாக மாற வாய்ப்பு ஏற்படுகிறது. மனிதர்களின் வாழ்க்கை என்ற நிகழ்வோடு, வாழ்வியல் இருத்தலுக்கான போராட்டம் என்ன உறவு கொண்டுள்ளது? ஒரு புறம் உணவு விரயம் மறு புறம் உணவுக்காக திண்டாட்டம், நம் நாட்டில் பஞ்சம் இல்லை ஆனால் பட்டினி இருக்கிறதே,அதே போல் ‘தனி மனிதருக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியார் பாடலும்  இருக்கிறது,இருந்தும் தனி மனிதர்களின் பட்டினி தொடர்கிறதே?
    இந்நிலை மற்ற உயிரினங்களுக்கு உண்டா? ‘காக்கை கரைவா கரைந்துண்ணும்’- ‘தான் பசித்திருக்க தன் இணைக்கு நீர் தந்த மான் என்பதெல்லாம் இயற்கை அல்ல அறிவியலும் அல்ல, உணவு போட்டியில் உயிர் இழக்கும் அல்லது உணவை தேடி ஓடும். 
   “தகுதி உள்ளவை, தக்கவை, உயிர் வாழும் எனும் சார்லஸ் டார்வின் கோட்பாடு நினைவுக்கு வந்தது. இந்த பையன் போன்ற மனிதர்கள் தகுதி அற்றவர்களா? தாகாதவர்களா? நாம் ஏன் உதவி செய்ய வேண்டும்? இவர்கள் ஏன் உயிர் வாழ வேண்டும்? எப்படி உயிர் வாழ்கிறார்கள்? டார்வினின் கோட்பாடு மனிதர்களுக்கு பொருந்துமா? நான் வீட்டிற்குள் நுழையும் போது முடிவிற்கு வந்தேன், மனிதர்களை தவிர, மற்ற எல்லா உயிரினங்களுக்கும் இந்நிலை பொருந்தாது என கருதுகிறேன்.
மனிதன் அறவியலாலும்,அறிவியலாலும் காக்கபடுகிறான். மனிதர்களை காப்பாற்ற தத்துவகளும்,கோட்பாடுகளும் இருக்கின்றன.உலகத்தில் எந்தவொரு தனி மனிதனுக்கும் உணவில்லை எனில் ஜகத்தை போர்களமாக்கி போர்க்குரல் எழுப்பிய காரல் மார்க்ஸ் தத்துவமும், சாதி, மத பேதங்கள் மூலம் மோதல்களுக்கு எதிராக மனித சமூகத்தை காப்பாற்றும் பெரியாரின் சம தர்ம சமுதாய தத்துவமும் இருக்கும் மட்டும், ‘தக்கவை உயிர் வாழும் கோட்பாடு மனிதர்களுக்கு பொருந்தாது என்றே நினைக்கின்றேன். எனக்கும் அந்த பெங்களூர் பயணிக்கும், பசியால் துடிக்கும் சக மனிதனுக்கு உணவு வாங்கி கொடுக்கும் உந்துதல் ஏற்பட்டதிற்கு மனித நேயமும்,மேலே குறிப்பிட்ட தத்துவங்களும் தான் காரணம் என கருதுகிறேன்.
             அடுத்த நாள் காலை என் செல்பேசி புதிய நம்பருடன் ஒலித்தது, “சார், நான் ஊர் வந்து சேர்ந்து விட்டேன், இனி இங்கேயே வேலை பார்த்துக்கிறேன், சார், கண்டிப்பாக ஒரு நாளைக்கு எங்க ஊருக்கு வாங்க”- ‘சரி தம்பி, மேலும் படிக்க முயற்சி செய் என கூறி தொடர்பை துண்டித்தேன், மனதிற்கு நிம்மதியாக இருந்தது, அன்றைய தினம் முழுவதும் மனம் மகிழ்ச்சியாக இருந்தது.  

நான் சந்தித்த உண்மை சம்பவம், சிந்தனையின் வடிவத்தில் சமர்பிக்கின்றேன்.


அ.மு.அம்சா,
திருப்பூர்.        

Thursday, March 22, 2012

இன்று உலக வன(கானக) நாள் (21-03-2012), காடுகள் பற்றிய அக்கறையும், விழிப்புணர்வும் ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட நாள்.காட்டை பற்றி சிந்தித்தால் நாட்டின் நலன் கூடும்.
காடு நம் பழைய வீடு,உயிரினங்களின் வாழ்விடம்.

காடு உயர நாடு உயரும்,
நாடு உயர மக்கள் வாழ்வு உயரும்,
மக்கள் வாழ்வு உயர மகிழ்ச்சி உயரும்,
மகிழ்ச்சி உயர ஒற்றுமை உயரும்,
ஒற்றுமை உயர்ந்தால் உலகம் உயரும்.