Nature - இயற்கைப் பதிவுகள்

காட்டை பற்றி சிந்தித்தால் நாட்டின் நலன் கூடும்.காடு நம் பழைய வீடு,உயிரினங்களின் வாழ்விடம்.!

Thursday, October 4, 2012

காட்டுயிர் வார விழா


                       18 ஆம் நூற்றாண்டுக்கு பின் இப்பூமியில் மூன்றில் ஒரு பங்கு இயற்கை வளங்கள் மனிதர்களின் வசதிகளுக்கும், பேராசைகளுக்கும் மெல்ல இரையாகி, இன்றைக்கு மிக வேகமாக அழிக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 100 ஆண்டுகளில் அழிந்து போன உயிரினங்களும், அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களும் பட்டியலில் இடம் பிடித்தன. பல்லுரியம் சிதைக்கப்பட்டது, பல்வேறு பறவை இனங்கள் அழிவின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டு இருக்கின்றது. தாவர இனங்களும், தாது பொருட்களும் சூறையாடப்பட்டு கொண்டு இருக்கின்றது. எல்லா உயிரினங்களுக்கும் வீடாக இருந்த இப்பூமி, மனிதன் என்ற ஒரு உயிரினத்தின் ஆதிக்கத்தால், பேராசையால் இயற்கை சமநிலை சீர்கெட்டு, சீரழிந்து வருகிறது.


           இயற்கை வளம் அழிய தொடங்கிய பின், வளமான மண் சீர்கெட்டு, நீர்நிலைகள் மாசுபட்டு இன்றைக்கு உலகில் பல கோடி மக்கள் அத்தியாவசிய உணவு பொருட்களுக்கும், ஊட்டசத்து குறைபாட்டினால் நோய்களுக்கு எதிராகவும் போராடி வருகின்றனர். உலக வெப்பமயமாதல், எரிபொருள் பற்றாகுறை, பருவநிலை மாற்றம் போன்ற காரணிகள் ஏற்படுவதற்கு இயற்கை சமநிலை குலைந்ததே காரணம். இப்பூமியின் பாதுகாப்பு குறித்தும், சுற்றுசூழல்,காட்டுயிர் மற்றும் பல்லுரியம் பற்றிய முக்கியத்துவம் குறித்தும் மேற்கத்திய அறிஞர்கள் கவலைப்பட தொடங்கினர். இன்று வரை சுற்றுசூழல் இயற்கை மற்றும் காட்டுயிர் குறித்த நுட்பமான தகவல்களும், சிந்தனைகளும் நாம் அங்கிருந்து தான் பெற வேண்டியுள்ளது.
               நம் நாட்டை பொறுத்தவரையில் தொழில், வர்த்தகம், அரசியல், சினிமா, இலக்கியம் போன்றவைகளுக்கு தரும் முக்கியத்துவம், இயற்கை, காட்டுயிர், சுற்றுசூழல் சார்ந்த நிகழ்வுகளுக்கு நமது சக்தி வாய்ந்த ஊடகங்கள் அக்கறை கொள்வதே இல்லை. நம் உயிர்மண்டலத்தின், உயிர் பிரச்சனைகளில் ஊடகங்கள் உண்மைகளை அலட்சியப்படுதுகின்றன. சினிமாவுக்கும், நடிகர், நடிகைக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் இயற்கைக்கும், காட்டுயிர்களுக்கும் கொடுக்கப்படுவதில்லை.    
             சங்ககாலத்தில் உயிரின சூழலில், இயற்கையோடு இயைந்து, நாரையை தூது விட்டு, புலியை பூனை போல் அருகில் வாழவைத்து, யானையை மாடு போல் வேளாண்மைக்கு பயன்படுத்திய நமது மரபு எங்கே போயிற்று?  நமது மரபு சார்ந்த இயற்கை அறிவியலை மீட்டெடுத்து, மண்ணையும், மணிநீரையும், காற்றையும், காட்டுயிரையும் காப்பாற்ற அக்டோபர் காட்டுயிர் வார விழாவை கொண்டாடுவோம், விழிப்புணர்வை உண்டாக்குவோம்.  

No comments:

Post a Comment