Nature - இயற்கைப் பதிவுகள்

காட்டை பற்றி சிந்தித்தால் நாட்டின் நலன் கூடும்.காடு நம் பழைய வீடு,உயிரினங்களின் வாழ்விடம்.!

Thursday, April 19, 2012

சிறுத்தை என்ன குற்றம் செய்தது?

“கொலை வாளினை எடுடா கொடும் செயல் புரிவோர் அறவேஎன்று புரட்சி கவிஞர் பாடினார். படத்தை பாருங்கள் ‘கொடும் செயல் புரிவோர் கொலை வாளினை கையில் வைத்திருக்கிறார்களே என்ன செய்வது? இந்த கொலைகாரர்களிடம் சிறு குழந்தையை போல, சிறுத்தை சிக்கியிருக்கிறதே? என்ன குற்றம் செய்தது? ஏன் இந்த கொலை வெறி?

பூனை குடும்பத்தில் புலியை விட சிறுத்தை வலிமை குறைந்தது என்றாலும் தன் இரையை வேட்டையாடும் போது நெடும் பாய்ச்சல் பாயும் ஆற்றல் பெற்றது. சிறுத்தை எளிதில் மரம் ஏறக்கூடியது. அழகிய செம்பழுப்பு மஞ்சள் உடலில் கருப்பு புள்ளிகளுடன் கலந்து கவர்ச்சியுடன் காணப்படும் சிறுத்தை, மனிதர்களுடான மோதலில் சிக்கி இன்றைக்கு பல இடங்களில் கூண்டு வைத்து பிடிக்கப்படும் விலங்குகளில் சிறுத்தை முதலிடம் வைக்கிறது .சிறுத்தைகள் வாழும் இடங்களில் மனிதர்கள் ஆக்ரமிப்பு செய்ததும்,காடுகளை அழித்து தோட்டங்களை உருவாக்கியதும்,அங்கு கால்நடைகளை வளர்ப்பதும் தான்,மனிதர்களுக்கும்,சிறுத்தைகளுக்கும் மோதல் ஏற்பட மூல காரணம். மனிதர்களுடன் மோதிய உயிரினங்கள் வெற்றி அடைந்ததாக வரலாறு இல்லை.இனி எதிர்காலத்தில்(விரைவில்)சிறுத்தைகள் அழிந்து வரும் பட்டியலில் விரைந்து இடம் பிடிக்கும் என நம்பபடுகிறது.

காட்டுத்தீ


நம் மக்களில் பெரும்பாலானோர் காட்டுத்தீ என்றவுடனே அது காட்டுக்குள் மூங்கிலோடு மூங்கில் உரசி தீப்பிடிப்பதாக நம்புகின்றனர். நம் நாட்டு காட்டுத்தீ அனைத்தும் மனிதர்களால் வைக்கப்படும் தீ. பழி வாங்க துடிக்கும் குணமுள்ள மனிதர்களின் கொடூர செயல். காட்டுத்தீயினால் ஏற்படும் சேதங்களும், இழப்புகளும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். நம் தலையை நாமே கொள்ளி வைப்பதற்கு சமம். மடி அறுத்த பிறகு பால் கறக்க முடியுமா?
காட்டில் தீ வைப்பதற்கான காரணங்கள்:
1.  காட்டுக்குள் ஆடு,மாடுகள் மேய்ப்பதர்க்கும், விறகு எடுப்பதற்கும் வன துறையும், அரசும் அனுமதி மறுப்பதால், வனத் துறைக்கும், அரசுக்கும் எதிராக பழி வாங்குவதற்காக வைக்கப்படும் தீ (எங்களுக்கு பயன்படாதது, யாருக்கும் பயன்படகூடாது)
2.  காட்டுக்குள் தீ வைத்தால், தீயினால் ஏற்படும் புகை, மேலே சென்று- மேகங்களில் கலந்து மழையாக பொழியும் என்ற தவறான நம்பிக்கை. (இது புகழ் பெற்ற மூடநம்பிக்கை)  
3.  காட்டு ஓரங்களில் பீடி, சிகரெட் புகைபவர்கள் அணைக்காமல் விட்டெரிவது.
இலட்சக்கணக்கான ஆண்டுகளாக பல்லுயிர் துடிப்புடன் உருவாகிய காடுகளை, அது சார்ந்து இருக்கும் உயிரினங்களை, சில மணி நேரங்களில், தீயினால் அழிப்பது, மனிதர்களால் மீட்டு எடுக்க முடியாத பேரிழப்பாகும். மனிதர்களின் பழிவாங்கும் கொடூர செயலையும், அறியாமையும் எப்படி மாற்ற போகிறோம்?