Nature - இயற்கைப் பதிவுகள்

காட்டை பற்றி சிந்தித்தால் நாட்டின் நலன் கூடும்.காடு நம் பழைய வீடு,உயிரினங்களின் வாழ்விடம்.!

Monday, January 31, 2011

மறைந்து வரும் ஒரு அற்புத உலகம்


முக்குர்த்தி சரணாலயத்திலுள்ள வனவிடுதியை நாங்கள் அடைந்தபோது வெளிச்சம் மங்க ஆரம்பித்திருந்தது. எங்களை இறக்கி விட்டுவிட்டு ஜீப் ஊட்டிக்குத் திரும்பிச் சென்றது. வராந்தாவில் விடுதிக்காப்பாளர் ஒரு லாந்தரைத் துடைத்துக் கொண்டிருந்தார். உள்ளே இருந்த  மேசையின் மீது ஓர் அட்டையில் ஒட்டப்பட்டிருந்த தட்டச்சு வாசகம் முதலில் என் கண்ணில் பட்டது. எழிலார்ந்த இந்தப் பிரதேசம், முன்னெச்சரிக்கை ஏதுமின்றி ஆபத்தானதாக மாறக்கூடும். திடீரென வரும் பனிமூட்டம், பார்வையை மறைக்கும் புயற்காற்று எந்த நேரத்திலும்  இங்கு தோன்றலாம்’  நீலகிரி காட்டுயிர் சங்கத்தின் எச்சரிக்கை இது.


நீலகிரியிலுள்ள முக்குர்த்தி ஆற்றின் கரையில் உள்ள இவ்விடுதி, ட்ரௌட் எனும் அரிய மீனுக்குத்  தூண்டில் போட வருபவர்களுக்காகவும் வேட்டையாடிகளுக்காகவும் பிரித்தானியர் காலத்தில் கட்டப்பெற்றது. Mukurthi Anglers hut எனப் பல வேட்டை நூல்களில்  குறிப்பிடப்படும்  இரண்டே அறைகள் கொண்ட இவ்விடுதி பிரபலமானது. சுற்றிலும் நெடி துயர்ந்த மலைகள். புல் வெளியால் போர்த்தப்பட்ட மலைச்சரிவுகள். அவற்றின் மடிப்புகளூடே செழித்திருக்கும் மழைக் காடுகள். சோலை (shola) என்று குறிப்பிடப்படும் இக்காடுகளினூடே சலசலக்கும் நீரோடைகள். அமைதி சூழ்ந்த இப்பள்ளத்தாக்கில் அவ்வப்போது எழும் பறவைகளின் ஒலி. மனிதர்களால் சீரழிக்கப்படுவதற்கு முன்னால் நீலகிரிப் பீடபூமி எவ்வாறு இருந்தது என்பதை இப்பிரதேசம் இன்று நமக்கு உணர்த்துகின்றது.

1603இல் கள்ளிக்கோட்டையிலிருந்து இங்கு வந்த ஜேம்ஸ் ஃபினினிசியோ (James Fininicio) என்ற சேசு சபைத் துறவி ஒருவர் வெளியுலகிற்கு முதன்முதலாக இந்த சொர்க்க பூமியைப்பற்றி ஒரு பதிவின் மூலம் தெரிவித்தார். அப்போது கீழிருந்து இங்கு வருவதற்குத் துணிந்தவர் வெகுசிலரே. 1819 இல் கோயம்புத்தூர் கலெக்டராக இருந்த ஜான் சல்லிவன் (1788-1855) (John Sullivan)என்ற பிரித்தானிய அரசு அதிகாரி, ஒரு சிறு படையுடன் நீலகிரிக்குச் செல்ல முடிவு செய்தார். பவானிக்கருகே இருந்த டணாயக்கன் கோட்டையிலிருந்து புறப்பட்டார். (இக்கோட்டை பாவனிசாகரில் முழுகிவிட்டது. நீர் வறளும் காலத்தில் ஏரியின் நடுவில் இதன் மேல்ப் பகுதியை இன்றும் காணலாம்.) நீலகிரிப் பீடபூமியை அடைந்த சல்லிவன் அப்பிரதேசத்தைச் சிலாகித்து தாமஸ் மன்றோவிற்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினார். திரும்பி வந்த பின் சிறைக் கைதிகளைப் பயன்படுத்தி ஒரு குதிரைப்பாதையைப் பாவினார். கோயம் புத்தூருக்கு அருகிலிருக்கும் சிறுமுகையிலிருந்து, கோத்தகிரி வழியாக ஒத்தகமந்து என்ற தொதுவர் குடியிருப்புவரை இப்பாதை நீண்டது. (மந்து என்பது ஐந்து, ஆறு குடிசைகளேயிருக்கும் தொதுவர் குடியிருப்பைக் குறிக்கும் சொல்.) சலவன் துரை என்று மக்களால் அறியப்படும் இவர்தான் ஒத்தகமந்தில் மெட்ராஸ் ராஜதானியின் கோடைகால தலைநகரை அமைக்கலாம் என்று யோசனை கூறியவர்.

சல்லிவன் நீலகிரிப் பீடபூமிக்கு வந்தபோது அங்கு நான்கு பழங்குடியினர் வசிப்பதைக் கண்டார்-தொதுவர், கோத்தர், குரும்பர், படுகர். இவர்கள் ஒருவருடன் ஒருவர் இணைந்து, சண்டை சச்சரவின்றி, காட்டையும் சுற்றுச்சூழலையும் அழிக்காமல் வாழ்வதை இவர் பதிவு செய்தார். வெட்டு மரத்தொழிலை இவர் எதிர்க்காவிட்டாலும், மழைக்காடுகள்தாம் முக்கிய நீராதாரம் என உணர்ந்திருந்தார். ஒரு தீர்க்கதரிசி போல் எழுதினார் வணிக நோக்கில் இங்குள்ள சோலைக்காடுகள் அவ்வளவு பயனுள்ளவை இல்லை என்றாலும், நீரூற்றுகள் இங்கேதான் உள்ளன.நதிகள் வறண்டு போவதற்கும் காடுகளுக்கும் உள்ள பிணைப்பை இன்றும் நாம் உணராதிருப்பதை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

இன்றைய பல சூழியலாளர்கள், வரலாற்றாசிரியர்கள் நம் நாட்டின் பிரச்சினைக்கெல்லாம் காலனிய ஆட்சியே காரணம் என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இருக்கலாம். ஆனால் சில பிரிட்டீஷ் அரசு அதிகாரிகள், சூழியல் சீரழிவு பற்றி எச்சரிக்கை அன்றே செய்ததல்லாமல், சில முன் நடவடிக்கைகளும் எடுத்திருக்கின்றார்கள். இயற்கையின் நுண்ணிய பிணைப்புகளைப் பற்றி நாம் அறியாத காலம் அது. இந்தப் பத்திகளில் நான் முன்பு எழுதியிருந்த ஹ்யூகோ வுட் (Hugo Wood) பொள்ளாச்சிக்கருகே உள்ள ஆனை மலையில் பரந்திருந்த தேக்கு மரக் காடுகளைக் காப்பாற்றினார். சல்லிவனும் அப்போதே எச்சரித்தார்.

இப்பகுதியில் தேயிலை 1833இல் முதன்முதலாகப் பயிரிடப் பெற்றது. பரந்திருந்த காடுகள், காட்டுயிர்களின் வாழிடம் அழிக்கப்பட்டன. மலைகள் மொட்டையாயின. உயிரினங்களின் வாழிடம் அழிக்கப்பட்டு, பசுமைப் பாலைவனம் என்று குறிப்பிடப்படும் தேயிலைத் தோட்டங்கள் கண்ணுக் கெட்டிய தூரம் வரை பரவின. இதைக்கண்ட சல்லிவன் பூமி வறண்டுவிட்டது. கால்நடைகளுக்குத் தீவனம் இல்லை. காடுகள் அழிக்கப்பட்டதால், நீரூற்றுகள் வறண்டு போய்விட்டன. கோடையில் நீரில்லாமல் கிராம மக்களும் தவிக்கின்றார்கள்.சல்லிவனின் கூற்றைப் பரிசீலித்த அரசு, வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் பதிலாக இன்னொரு மரம் நடப்பட வேண்டும் என்று ஒரு அரசாணை வெளியிட்டது. அது சீக்கிரமே மறக்கப்பட்டது.
ஊட்டி அரசின் கோடைகால தலைநகரமாக ஆன பின்தான் இப்பகுதியின் சீரழிவு அதிகரித்தது. உருளைக்கிழங்கு பரவலாகப் பயிரிடப் பெற்றது. தோட்டப் பயிர்களின் வரவு மலைப்பிரதேசத்தின் உயிரினச்செழுமையை பாதித்தது. இயற்கை எழிலில் நாட்டமில்லாத ஒரு பெரிய கூட்டம் குதிரைப்பந்தயத்திற்காக மேலே வரத் தொடங்கியது. வேட்டையாடிகள் வந்து குவியத் தொடங்கினார்கள். வரையாடு, யானை போன்ற விலங்குகள் கணக்கின்றி சுட்டுக் கொல்லப்பட்டன. வரையாடு அழிவின் விளிப்பிற்குத் தள்ளப்பட்டது. இங்குப் பெருகியிருந்த கருமந்திகளை (Nilgiri Langur) இன்று காண்பதே அரிதாயிருக்கின்றது.


சுதந்திரம் கிடைத்தபின் அழிவின் வேகம் அதிகரித்தது. நீர்மின்சாரத் திட்டங்கள் பெரும் வனப்பரப்பை நீரில் மூழ்கடித்தன. காட்டுயிர்களின் வாழிடம் அழிந்து போனது. வணிகப்பயிர்களின் விரிவாக்கத்திற்காகவும் அகதிகளைக் குடியமர்த்துவதற்காகவும் காகித ஆலைகளுக்காகவும்  காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டன. செயற்கை நூலிழைக்காகத் தைலமரங்களும், தோல்பதனிடும் தொழிலுக்காகச் சீகை மரங்களும் புல்பரப்புகளில் பெருமளவில் நடப்பட்டு, இப்பகுதியின் சூழியல் சமன் குலைக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் அருகே ஒரு பெரிய செயற்கை இழை ஆலை நிறுவப்பட்டது. பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த ஆரம்பித்தபின், இந்த நஞ்சு, மலைச் சரிவுகளில் ஓடி, ஓடைகளில் கலந்து எல்லா நீர் நிலைகளையும் பாதித்தது. இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் போன்ற நிறுவனங்களிலிருந்து வெளியான நச்சுநீர் ஓடைகளில் கலந்தது. சுற்றுலா என்ற பெயரில் இம்மலைப்பகுதியின் எழில் குலைக்கப்பட்டது. பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டதால், மண்ணைத் தக்க வைக்கும் வேர்ப்பிடிப்புகளில்லாமல் நிலச்சரிவு அடிக்கடி ஏற்பட ஆரம்பித்தது. தீடீர் வெள்ளத்திற்கும் இதுதான் காரணம். குன்னூரிலிருந்து ஊட்டி செல்லும் சாலையின் இடது புறம் பார்த்தால் கேத்திப் பள்ளத்தாக்கு ஒரு பாலைவனம் போல் காட்சியளிக்கின்றது.

பழங்குடியினரின் வாழ்வும் பாதிக்கப்பட்டது. பலர் சூழியல் அகதிகளானார்கள். வெளியுலகத்துடன் தொடர்பற்றிருந்த தொதுவர் இனம் பரங்கிப் புண் நோய்க்கு ஆளாகி, அழியும் நிலைக்கு வந்தது.  700 பேரே எஞ்சியிருந்தனர். ஐம்பதுகளில் இவாம் பில்ஜின் (Evam Pilgim) என்ற ஒரு தொதுவ இனப்பெண் இவர்களுக்காக சிரத்தை காட்ட ஆரம்பித்தார். செவிலித்தாயாகப் பயிற்சி பெற்றிருந்த இவர், தொதுவர்களின் நலனுக்காகச் சில திட்டங்கள் தீட்டினார். பிரதமர் நேருவைச் சந்தித்து அரசின் ஆதரவைப் பெற்று, ஒவ்வொரு மந்துக்கும் சென்று மருத்துவ உதவி செய்தார். மறைந்து வரும் பழங்குடியினர் பற்றிய ஒரு நீண்ட கட்டுரையை நேஷனல் ஜியாக்ரஃபிக் இதழ் (National Geographic) வெளியிட்டபோது, பில்ஜினின் படத்தை வெளியிட்டு, ஒற்றையாளாக இருந்து, தொதுவர் இனத்தைக் காப்பாற்றினார் என்றது. கலிபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மொழியியலாளர் எம்.பி.எமனோ (M.B.Emeneau 1904-2005) ஊட்டிக்கு வந்து தொதுவர் மொழியை - எழுத்து இல்லாதது - ஆய்வு செய்த போது பில்ஜின் அவருக்கு உறு துணையாயிருந்தார். எமனோ எழுதிய Toda Grammar and Text (1961)என்ற நூலில் இம்மொழி 28 திராவிட மொழிகளில் ஒன்று என்று உறுதிபடுத்தினார். அவ்வப்போது கலெக்டர் அலுவலகம் முன்பு சத்தியாக்கிரகம் செய்து தொதுவர் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொண்டார். ஒரு மந்துக்கு வெகு அருகே ரேடியொ டெலஸ்கோப் நிறுவ திட்டமிடப்பட்ட போது, சத்யாக்கிரகம் செய்து மந்து நிலத்தைக் காப்பாற்றிக் கொடுத்தார். தமிழக அரசு உதகமண்டலம் என்ற சம்பந்தமே இல்லாத ஒரு புதிய பெயரை இந்நகருக்குச் சூட்டியபோது, இவர் எதிர்ப்பு தெரிவித்தார். ஒத்தகமந்து என்ற பாரம்பரியப் பெயரே இருக்கவேண்டும் என்றார். அரசு இந்தக் கோரிக்கையை நிராகரித்தது.  இன்று உடல் நலம் குன்றி படுத்த படுக்கையாக இருக்கின்றார்.

 காலையில் எழுந்து வராந்தாவில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்த போது தூரத்திலிலுள்ள மலை முகட்டில் வரிசையாக வரையாடுகள் செல்வதைப் பார்த்தோம். இந்த சரணாலயம் ஏற்படுத்தப்பட்டதே இவ்விலங்குகள் அற்றுப்போகாமல் இருப்பதற்குத்தான். எனினும் இன்று இருநூற்றுக்கும் குறைவான வரையாடுகளே இங்குள்ளன. 

அடிவானத்திற்கருகே முக்குர்த்தி சிகரம் ஒரு பிரமிட் போல் தெரிந்தது. இங்குதான் தம் மூதாதையர்களின் ஆவிகளிருப்பதாக தொதுவர்கள் நம்புகிறார்கள். இவர்களுடைய சடங்குகளில் எருமைக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. இவ்விலங்குகள் மலைவெளிகளில் தானாகத் திரிகின்றன. வேண்டும் பொழுது அவைகளைப் பிடித்துக்கொண்டு போகிறார்கள். வீட்டுக்கால்நடையாக இல்லாமல் இப்படித் திரிபவைகளை விலங்கியலாளர் ferral animals என்று குறிப்பிடுகிறார்கள்.
முக்குர்த்தி ஆற்றில் சில ட்ரெள்ட் மீன்களைப் பார்க்க முடிந்தது. இவை நியூசிலாந்திலிருந்து இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டது. இன்று தூண்டில் போட வருபவர் யாருமில்லை. உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் இவைகளுக்காக பயன்படுத்தப்பட்ட பூச்சி மருந்துகளால் நீர்வாழ் பூச்சிகள் அழிக்கப்பட்டுவிட்டன. இந்த மீனை இன்று பார்ப்பதே அரிதாக இருக்கின்றது. இந்த மீனை இங்கு கொண்டுவந்த டி.ஆர்.வில்சனின் கல்லறை, ஊட்டியிலிருந்து முதுமலை செல்லும் சாலையில், பைக்காரா ஓடையைக் கடந்தவுடன் இடதுபுறம் ஒரு சிறிய வளாகத்தின் நடுவில் இருக்கின்றது.  
நன்றி: உயிர்மை பதிப்பகம்
தாமரைப் பூத்த தடாகம்
ஆசிரியர் சு. தியடோர் பாஸ்கரன்